சத்தீஸ்கர் மாநிலம் கும்ஹாரி பகுதியில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியை நோக்கி தொழிலாளர்கள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கும்ஹாரி வழியாக சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், பேருந்தில் இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில், பலர் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.