எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
கடந்த மார்ச் மாதம் தமிழக மீனவர்கள் 19 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதன் காரணமாக 19 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், 19 மீனவர்களையும் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்தது.
அவர்கள் இலங்கையிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், சென்னையிலிருந்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீனவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மீனவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.