திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி, ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும், அரசியல் பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்ன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு சென்று உள்ளனர்.
இதனை அடுத்து, எட்டரை பஞ்சாயத்து தலைவர் திவ்யா அன்பரசன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் சிக்கியது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கோடி ரூபாய் பணத்தை வீட்டில் எதற்காக வைத்திருந்தார்கள்? வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்பரசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதைத் தெரிந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள், அவருடைய வீட்டின் முன்பு கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.