2024 மக்களவை தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் அனல் பறக்கும் உரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
பிரதமர் மோடி பேசியது என்ன ? எதிர்க்கட்சிகள் ஏன் அதை சர்ச்சைக்கு உள்ளாக்குகின்றன ? இது பற்றி தற்போது பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
“இடதுசாரிகள் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் பிடியில் காங்கிரஸ் சிக்கியுள்ளது என்றும், காங்கிரஸ் தமது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் ‘செல்வ மறுபங்கீடு’ என்ற வாக்குறுதி மிகவும் தீவிரமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இது மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது” என்றும் பிரதமர் மோடி மிக கடுமையாக காங்கிரசை குற்றஞ்சாட்டியிருந்தார் .
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு நபருக்கும் சொந்தமான சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நமது சகோதரிகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார்கள், அரசு ஊழியர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது சரிபார்க்கப்பட்டு, நமது சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கம் வெள்ளி சொத்துக்கள் மட்டுமில்லாமல் பெண்கள் புனிதமாக கருதப் படும் மாங்கல்யம் எல்லாம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். மேலும், உங்கள் சொத்தை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் ,
நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று 2006 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் சொன்னதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி , இது நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பிரதமர் மோடி இதுபோன்ற பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அனைத்து இந்தியர்களுக்கானது . அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியைகொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை உண்மையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது என்றும் கார்கே தெரிவித்துளளார். இதே கருத்தை ராகுல் காந்தியும் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை பற்றி தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமித்ஷா, சிறுபான்மையினருக்குத் தான் இந்த நாட்டில் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்லுகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப் பட்ட மக்கள், ஆகியோர் தான் இந்த நாட்டின் முதல் உரிமை பெற்ற மக்கள் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் குடும்ப அரசியலைப் பாதுகாக்கவே பாடுபடுகின்றன என்றும், பிரதமர் மோடியோ இந்திய நாட்டு மக்களைப் பாதுகாக்கவே உழைக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரப் பொதுக்கூட்டமொன்றில் பேசியுள்ளார் .
2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஏப்ரல் 6 ஆம் தேதி, ‘காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால், நாட்டில் யாரிடம் சொத்து உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ‘சிறுபான்மையினருக்கு’ அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், நாட்டில் உள்ள செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்ததை பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.