தூக்கத்தில் மூச்சுத்திணறல் வருவதற்கு காற்று மாசுபாடு ஒரு காரணம் என்று
அதிர்ச்சி தரும் முடிவுகளை அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இண்டர்நேஷனல் நியூரோடாக்சிகாலஜி அசோசியேஷன் எனப் படும் சர்வ தேச நரம்பியல் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழில் ஒரு புதிய ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. OSA எனப்படும் obstructive sleep apnea சுவாசத் தடைக்கும், காற்று மாசுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன என அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக இரவில் ஒருவரின் மூச்சு நின்று நின்று மீண்டும் தொடங்கி தொடர்கிறது. இந்த மூச்சுத்திணறல் ஏன் ஏற்படுகிறது ? என்பதற்கு சில அறிவியல் காரணங்களையும் அந்த ஆய்வு பட்டியல் இடுகிறது.
இந்த ஆய்வுக்காக, மருத்துவ அறிவியல் வல்லுநர்கள், 12 ஆய்வுகளின் முறையான மதிப்பீடுகளை பற்றிய தரவை ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர். காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணமான இருப்பவைகளே, தூக்கத்தில் மூச்சுத்திணறல் வருவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
சாலைகளில் அதிகமாகிக் கொண்டே போகும் போக்குவரத்து, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை இவற்றால் காசு மாசுபடுகிறது. காற்று மாசடைவதால் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணமான நைட்ரஜன் டை ஆக்சைடு பொதுமக்கள் ஆரோக்கியத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது .
இந்த தூய்மையற்ற காற்றை சுவாசிப்பதனால், உடல் முழுவதும் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு மாறுபடுகிறது. மேலும், இது தூக்கத்தின்போது சுவாசப் பையின் அல்லது நுரையீரல் செயலிழக்க வழிவகுக்கிறது.
எனவே, இரவில் துாங்கும் போது ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பின் அளவு, அவரது வயது, உடல்வாகு, உடல் நலம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.