கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக பதிலடியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அண்மையில் ‘2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த அறிக்கைகள் என்று பெயரில் அமெரிக்கா ஒரு ஆவண அறிக்கையை வெளியிட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்காவின் அறிக்கைக்கு தாங்கள் எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும், இந்தியா பற்றிய மோசமான புரிதல்களுடன் வெளிவந்துள்ள அமெரிக்காவின் இந்த அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஒரு சார்புடைய அந்த அறிக்கையைப் பார்க்கும் போது, இந்தியாவின் மதிப்பீடுகள், விழுமியங்கள் பற்றி அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த அறிக்கை, தாம் சொல்லும் முடிவுகளுக்கும் உண்மையாக
இல்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசாவின் மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், கருத்து சுதந்திரம் மற்றும் பொறுப்பு உணர்வு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு ஜனநாயகத்திலும், கருத்து சுதந்திரம், பொறுப்பு உணர்வு மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
“குறிப்பாக நமது நாட்டில் உள்ள ஜனநாயகம் மட்டுமில்லாமல் மற்ற நாட்டின் ஜனநாயகங்கள் குறித்தும் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர வெளிநாட்டில் நடப்பது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம் அல்ல . என்று ஜெய்ஸ்வால் அமெரிக்காவுக்கு கடுமையான பதில் கொடுத்திருக்கிறார் .
தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், அதுகுறித்த விசாரணைக்கு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா அரசு வெளியிடும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவண அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு மாட்டிக்கொள்வது வழக்கம் . இந்த ஆண்டு இந்தியாவிடம் மூக்கறுப்பு பட்டுள்ளது அமெரிக்கா.