நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய முதல், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அருண் கோவில் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.