வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அமித்ஷா,
370-வது சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என ராகுல் காந்தி தெரிவித்ததாகவும், ஆனால் 370வது பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகளில் சிறு அசம்பாவித சம்பவமும் கூட நிகழவில்லை எனவும் தெரிவித்தார்.
வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் பல்வேறு அதிரடி முடிவுகளை பிரதமர் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது, பாகிஸ்தானில் இருந்து யார் வேண்டுமானாலும் நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதலை நடத்தலாம் என்ற நிலை இருந்ததாகவும்,
ஆனால் சர்ஜிக்கல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தீவிரவாதம், நக்சலிசம் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் எனவும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.