சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 1,500 சீக்கியர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
டெல்லி மற்றும் பஞ்சாபில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று, 1,500 சீக்கியர்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்த விழாவில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், தேசிய செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, டெல்லி பிரதேச தலைவர் வீரேந்திர சச்சதேவா ஆகியோர் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா,
“சீக்கியர்கள் திரளாக பாஜகவில் இணைந்தது பெருமை மற்றும் மகிழ்ச்சியான விஷயம். பிரதமர் நரேந்திர மோடி சீக்கிய சமூகத்துடன் ஒரு தனி பிணைப்பை கொண்டுள்ளார்.
பாஜக, சீக்கிய சமூகத்துடன் இணைந்து டெல்லி மற்றும் பஞ்சாப்பின் வளர்ச்சிக்காக செயல்படும்” என்றார்.
இந்நிகழ்வில், ஜஸ்மெய்ன் சிங் நோனி, ஹர்ஜீத் சிங் பாப்பா, ரமன்தீப் சிங் தாப்பர், பூபிந்தர் சிங் கின்னி, ரமன்தீப் சிங் மேத்தா, பர்வீந்தர் சிங் லக்கி, மஞ்சீத் சிங் அவ்லாக் ஆகியோருடன் சிங் சபா, பிற சீக்கிய அமைப்புகளுடன் தொடர்புடைய 1,500 சீக்கியர்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.