நீலகிரி மாவட்டம், உதகையில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததன் காரணமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு நேற்று மாலை சுமார் 20 நிமிடங்கள் வரை சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருணா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை எனவும், பாதுகாப்பு படையினரை மீறி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் யாரும் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமரா சுமார் 20 நிமிடங்கள் செயல் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.