பாய்மரப் படகு விளையாட்டு போட்டிகளுக்கான வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தெரிவித்துள்ளார்.
பாரிசில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில், பாய்மர படகு விளையாட்டு போட்டியில் பங்கேற்க, இந்தியா சார்பில் சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.
22 வயது நிரம்பிய நேத்ரா, பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் 5-ம் இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிரான்சில் இருந்து தமிழகம் வந்தடைந்த நேத்ராவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நேத்ரா குமணன், ஒலிம்பிக்கில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், இது எனது இரண்டாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்… கடைசி முறை எனக்கு சில வாய்ப்புகள் கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டேன்.
பிரான்ஸ் போட்டியில் முதல் 10 இடங்களை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தேன். அதனை செய்து முடித்ததால் இரண்டாவது முறையாக நமது நாட்டிற்காக பாய்மர படகு போட்டியில் களம் காண உள்ளேன்.
இந்தியாவும் பாய்மர படகு விளையாட்டு போட்டியின் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.