உட்கட்டமைப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்து ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டடியுள்ளார்.
5-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ராணுவ வீரர்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றியதுதான் காங்கிரஸின் வரலாறு என குறிப்பிட்டார்.
ராணுவத்தில் மேற்கொண்ட ஊழல்தான் காங்கிரஸின் முதலாவது முறைகேடு எனக் கூறிய அவர், இதற்கு உதாரணமாக போஃபர்ஸ் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என காங்கிரசின் ஊழல் பட்டியலை விவரித்தார்.
ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் காங்கிரஸ் ஊழல் செய்ததாகவும், இதன் மூலம் ராணுவத்தை அக்கட்சி பலவீனப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கூறிய பிரதமர் மோடி, தற்போது ராணுவத்துக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.