சீனாவுடன் இணைய வேண்டும் என்ற மிரட்டலுக்கு தைவானின் புதிய அதிபர் வில்லியம் லாய் அடி பணியாததால் தைவான் கடற்பகுதியில் ராணுவப் பயிற்சி ஒத்திகைகளை சீனா தொடங்கியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 117 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தீவுதான் தைவான்.
தனக்கு சொந்தமான மாகாணமாகவே தைவானை சீனா கருதுகிறது. அதனாலே தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. சீனாவின் இந்த நினைப்புக்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது.
தெற்கு சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களே தைவானின் ஆதி குடிமக்கள் என்பதாலும், சீனாவின் சிங் வம்சம் ஆண்ட பகுதியே தைவான் என்பதாலும், தைவான் தங்களுக்கு தான் சொந்தம் என்று நீண்ட காலமாகவே சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது.
இது மட்டுமில்லை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் வசம் இருந்த தைவான் சீனாவின் அதிகாரப்பூர்வபகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.
சீனாவின் உள்நாட்டுப் போருக்குப்பின், 15 லட்சம் பேருடன் தைவானுக்கு வந்த சீனாவின் முன்னாள் ராணுவத் தளபதி சாங் காய் ஷேக் என்பவர் 1980 வரை தைவானில் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். அவரது மரணத்துக்குப் பின் தைவான் ஜனநாயகத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது.
1996ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல்கள் நடந்தன . 1997ம் ஆண்டு இரு நாடு ஒரு அமைப்பு என்ற திட்டத்தை சீனா முன்வைத்தது. இந்த திட்டத்தை நம்பி அப்போது ஹாங்காங், சீனாவுடன் இணைந்தது. ஆனால் தைவான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தான், 2020 வரை தைவானின் துணை அதிபராக இருந்த வில்லியம் லாய் , இப்போது அதிபராகி இருக்கிறார். நடந்து முடித்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி DEMOCRATIC PROGRESSIVE PARTY வெற்றி பெறக்கூடாது என்பதற்காக , சமூக வலைத்தளங்களில் ஊடுருவி சீனா பலவகைகளில் முயற்சி செய்தும், DDP வெற்றி பெற்றது. இதன் மூலம் வில்லியம் லாய் அதிபரானார்.
இது சீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது . அதனால் தான் லாய் அதிபராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே ராணுவ பயிற்சி ஒத்திகைகளை தைவான் கடற் பகுதிகளில் சீனா நடத்தியுள்ளது.
இதற்கெல்லாம், அஞ்சுபவராக தெரியவில்லை வில்லியம் லாய். தனது முதல் அதிபர் உரையிலேயே தெள்ளத் தெளிவாக,’ தைவானை நீண்ட காலமாகத் தனக்குச் சொந்தமானதாகக் கூறி வரும் சீனாவின் மிரட்டலுக்கு தைவான் ஒருபோதும் பின்வாங்காது என்றும் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லியிருந்தார்.
மேலும் வில்லியம் லாய் பேச்சுக்குத் தண்டனையாக , தைவானைச் சுற்றி இரண்டு நாட்கள் ராணுவப் பயிற்சி ஓத்திகைகளைச் சீனா தொடங்கிய சில மணிநேரத்திலேயே, நாட்டின் கடற்படை தளத்திற்குச் சென்ற அவர், “தேசத்தைப் பாதுகாப்பதும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் தனது பொறுப்பு” என்று உறுதியளித்திருக்கிறார்.
ஏற்கெனவே சீன அரசால், பிரிவினை வாதி என்று முத்திரை குத்தப்பட்ட, தைவான் அதிபர் வில்லியம் லாய் ஒரு மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இளம் வயது முதலே தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்ற நிலைபாட்டைக் கொண்டிருந்தவர்.
தைவானுக்கு ஆயுதங்கள் வழங்குவதுடன், ராணுவ ரீதியிலான பாதுகாப்பையும் தரும் என்று கூறியிருக்கும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராகவும் போகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனா, தைவான் உறவு மோசமான நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானப் படை, கடற்படை, ஏவுகணைகளை செலுத்த வசதியாக போர் கப்பல்கள் , நீர்மூழ்கி கப்பல்கள் , போருக்கான பிரத்யேக ட்ரான்கள் என சீனா முழு அளவில் இராணுவ ஒத்திகையை நடத்தி இருப்பது, போர் எந்த நொடியிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
சீனாவின் இராணுவ நடவடிக்கைக்குப் பதிலடிக் கொடுக்க தயாராகவே இருப்பதாக , தைவான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தைவானில்,உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தவும் சீனா தீவிர நடவடிக்கைகளில் இறங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானின் புதிய அதிபரான வில்லியம் லாய் ,இதை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை உலகமே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது.