உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் பதிவான மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் எண்ணப்பட்டன.
இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கியிருந்தார்.
அவரை எதிர்த்து வாரணாசியில் களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலையில் இருந்தார்.
அடுத்தடுத்தச் சுற்றுகளில் பிரதமர் மோடி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகளைப் பெற்று தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அவர் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.