இந்தியாவில் மிக அதிக நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமை, நவீன் பட்நாயக்கிடமிருந்து நூலிழையில் நழுவியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக், தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், கடந்த 2000-ம் ஆண்டு பிஜூ ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அதன்பிறகு நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தார்.
தற்போது 77 வயதாகும் நவீன் பட்நாயக், 6-வது முறையாக முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பிஜூ ஜனதா தளமே ஆட்சியமைக்குமென கூறின. ஆனால், அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் நவீன்பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்தியாவில், 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதலமைச்சராகப் பதவி வகித்து, மிக அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் சிக்கிம் முன்னாள் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங். நவீன் பட்நாயக் 24 ஆண்டுகள் 71 நாட்கள் முதலமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
இந்த முறை வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவில் அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமை நவீன் பட்நாயக்கிற்கு கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நூலிழையில் நழுவியுள்ளது.