நாட்டின் பிரதமராக நாளை மறுதினம் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், கூட்டணி கட்சிகளின் மக்களவை குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் மாலை 6 மணிக்குகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில், தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.