பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் நட்டா,
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதாகவும், ஒடிசாவிலும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஆந்திராவில் என்டிஏ கூட்டணி அரசு அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, அதே இந்தியா லட்சிய இந்தியாவாக மாறி, வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்துடன் முன்னேறுவதாகவும் நட்டா கூறினார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரை தேர்வு செய்ய அனைவரும் வந்துள்ளதாகவும், நநேரந்திர மோடி என்ற பெயர் அனைத்து பொறுப்புகளுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,
என்டிஏ எம்பிக்கள் குழு தலைவராக மோடி பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்ததாகவும், அதனை தாம் வழிமொழிவதாகவும் கூறினார். இது நமது விருப்பம் மட்டுமல்ல – 140 கோடி மக்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,
பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். உலகளவில் 2047- ம் ஆண்டு இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும், மோடியின் பிரசாரம் ஆந்திராவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதனைத்தொடரந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,
இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என தெரிவித்தார். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது எனவும். மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.