மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் இன்று முறைப்படி பணிகளைத் தொடங்கினர்.
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கடந்த முறை 2021-ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவிற்கு இம்முறையும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஸ்வினி வைஷ்ணவ் இன்று ரயில்வே அமைச்சராக முறைப்படி பணிகளைத் தொடங்கினார்.
அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான சீர்திருத்தங்களை செய்துள்ளதாகவும், சாமானியர்களின் போக்குவரத்து முறையான ரயில்வேக்கு மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
இதேபோல், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று தனது பணிகளைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பை தமக்கு மீண்டும் வழங்கியதை மிகச் சிறந்த கவுரவமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். G-20 தலைமை, கொரோனா ஏற்படுத்திய சவால்கள், ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரி போன்ற முக்கியமான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை சிறப்பாகக் கையாண்டதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களும் இன்று முறைப்படி பணிகளைத் தொடங்கினர்.