தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில் , தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரையில், 15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (OUT)