முக்கிய பிரமுகர்களான, விஐபி-களுக்கு வழங்கப் படும் கருப்பு பூனை படை பாதுகாப்பு
திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…!
தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் விமான கடத்தல்கள் போன்ற சூழல்களை கையாளுவதற்காக, கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இதில் உள்ள கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், காலப்போக்கில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினால், கருப்பு பூனை படையினரால் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட முடியும் ? என்ற கேள்வி எழுந்தது. மேலும், விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது கருப்பு பூனை படையினருக்கு கூடுதல் சுமை என்றும் கருதப்பட்டது.
எனவே விஜபி-களுக்கு வழங்கப்படும் கருப்பு பூனை படை கமாண்டோக்களை திரும்ப பெறும் திட்டத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதன் தொடக்கமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் வதேரா காந்தி என காங்கிரஸ் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த SPG பாதுகாப்பு நீக்கப்பட்டது.
இந்நிலையில், விஐபிக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவருவது?, விஐபிகளுக்கான பாதுகாப்பைத் திரும்ப பெறுவதா ? அல்லது குறைப்பதா ? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கருப்பு பூனை படை கமாண்டோக்களை விஐபி பாதுகாப்புப் பணிகளில் இருந்து முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதோடு, Z + பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு திரும்புவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணியில், இனி துணை இராணுவப் படையினர் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறி வரும், பதான்கோட் மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில், விரைவில் NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இராமர் கோயில் இருக்கும் அயோத்தியிலும் தேசிய பாதுகாப்பு படை மையம் அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.