குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், பலியான 45 இந்தியர்களின் உடல்கள் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த தீ விபத்திற்கு கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததே காரணம் என்று தகவல் வெளியான நிலையில், குவைத் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….!
வளைகுடா நாடான குவைத்தில் NBTC என்ற கட்டுமான நிறுவனத்தில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து தமிழகம், கேரளா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களே அதிகமாக அந்நிறுவனத்தில் ஊழியர்களாக உள்ளனர். இந்த கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் 195 பேர் , மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
கடந்த 11ஆம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. அதிகாலை என்பதால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பலரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் உயிர் பயத்தில், அடுக்கு மாடியில் இருந்து கீழே குதித்தபோது, படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக பட்சமாக 100 பேர் தங்குவதற்கான இடவசதி உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கிட்டத்தட்ட 190 பேர் தங்கியிருந்தாகவும், கீழ் தளத்தில் சமையலுக்காக பயன்படுத்திய கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தரை தளத்தில் உள்ள பராமரிப்பு அறையில் அனுமதி இல்லாமல் 6 கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அது வெடித்ததே இந்த பயங்கர தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த இந்திய தூதர் ஆதர்ஷ், தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி கட்டிடத்துக்குச் சென்று பார்வையிட்டதோடு, படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த கோரத் தீ விபத்தில் பலியானவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பலியான கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருக்கிறது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த ராமு கருப்பணன், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஷெரீப், ரிச்சர்ட் ராய், தூத்துக்குடியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், சிவசங்கர், மற்றும் ராஜூ எபினேசர் ஆகிய 7 பேரும் தீ விபத்தில் உயிரிழந்திருப்பதாக குவைத் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, குவைத் தீ விபத்து குறித்து உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தீ விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத்துக்கு சென்று, இந்திய விமானப்படை விமானம் மூலம் 45 இந்தியர்களின் உடல்களை மீட்டு வந்துள்ளார்.
கொச்சி விமான நிலையம் வந்தடைந்த 45 உடல்களுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆம்பூலன்ஸ் மூலம் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குவைத் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.