சென்னை திருவொற்றியூரில் வெறிகொண்டு முட்டிய எருமை மாட்டால் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்தனர். தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தனது உறவினர் இல்லத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கிராம வீதியின் ஒரு முனையில் இருந்து ஒடி வந்த எருமை மாடு, அவ்வழியில் நடந்து சென்ற மதுமதியை கொடூரமாக முட்டி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.
மதுமதியின் ஆடை எருமை மாட்டின் கொம்பில் மாட்டிக் கொண்டதால், 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். 40 தையல்களுடன் மதுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுமதியை காப்பாற்ற முயன்ற அதே பகுதியை சேர்ந்த இஸ்திரி கடைக்காரர் சந்திரசேகரையும் எருமை மாடு புரட்டி போட்டதில், அவர் காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் எருமை மாட்டை மின் கம்பத்தில் கயிறு மூலமாக கட்டி வைத்துள்ளனர். இருப்பினும் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு மீண்டும் மிரண்டு ஓடிய எருமை மாடு, முனுசாமி என்பவரையும் தாக்கியுள்ளது.
கிராம வீதி வழியாக உரிமையாளருடன் வந்துகொண்டிருந்த மாட்டை நாய் கடித்ததாகவும், அந்த பயத்தில் மிரண்ட மாடு ஆக்ரோஷமாக ஓடி வந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட மாட்டின் உரிமையாளர் ஒடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாடுகள் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பதை விளக்குகிறார் விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் மருத்துவர் சின்னி கிருஷ்ணன்.
திருவொற்றியூர் கிராம வீதியில் இருந்து மீட்கப்பட்ட எருமை மாட்டை பெரம்பூரில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாநகராட்சி கொண்டு சென்றுள்ளது. ஒருபக்கம் தெரு நாய்கள் தொல்லை, மற்றொரு பக்கம் மாடுகள் என பொதுவெளியில் நடமாடும் மக்களை தினமும் அச்சுறுத்தும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.