கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ்,பேரிக்காய் மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் நிலைமைக்கு யார் காரணம்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமாகும். இங்கு, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ்.
பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, குணா கேவ்ஸ் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பிரசித்திப்பெற்றதாகும். இதனை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கொடைக்கானல் இயற்கையை ரசிக்க மட்டுமல்ல, இங்கு விளையும் பிளம்ஸ், பேரிக்காய், ஆப்பிள் பழ வகைகளும், கேரட், காலிஃபளவர் உள்ளிட்ட காய்கறிகளுக்கு நல்ல மார்கெட் உள்ளது. குறிப்பாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் மரங்களை வளர்த்து, பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும், கேரளா, பெங்களூர், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் இந்த பழங்களை விற்பனைக்கு நல்ல லாபம் ஈட்டி வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேரிக்காய், பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், காலம் தவறி பெய்து வரும் மழை மற்றும் இரசாயன உரங்களே காரணம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 100 ரூபாய்க்கும், பிளம்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், விளைச்சல் இல்லாததால், கடைகளுக்கு ஒரு சில கிலோ மட்டுமே வருவதாகவும், இதுதொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை, எந்த ஒரு ஆலோசனையும் வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதுடன், புதிய நாற்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று தோட்டக்லை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், சமீப காலமாக விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவதால், பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கனத்த குரலுடன் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் பிளம்ஸ், பேரிக்காய் பழங்களை காட்சி பொருளாக மட்டுமே காணமுடியும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தோட்டகலை துறை செயலரும் மலைப்பயிர்களை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.