கள்ளச்சாராய மரணங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க, ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தில், விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
இதுகுறித்து தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.