சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரை தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கையாலாகாத திமுக அரசு, தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக சகோதர சகோதரிகளை முடக்குவதிலேயே கவனமாக இருக்கிறது.
கோவையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை முடக்க,தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் பி.கே.கனகசபாபபதி, மாநிலப் பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம், , மாநிலப் பொருளாளர் திரு எஸ்.ஆர்.சேகர், கோவை மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்குமார் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசு. ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பறிகொடுத்தும், தற்போது வரை, இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரை, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யவில்லை.
நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தார்மீக அடிப்படையிலான பொறுப்பேற்பதைக் கூட, முதலமைச்சரால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், பொதுமக்கள் மீது முதலமைச்சர் மற்றும் திமுக அரசின் அக்கறை என்ன?
எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க, ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக செய்யும் முயற்சிகள் பலிக்காது. தமிழகம் முழுவதும், திமுக ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரையில், தமிழக பாஜக
தொடர்ந்து போராடும் என அண்ணாமலை கூறியுள்ளார்.