போதைப்பொருளுக்கு எதிராக டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க சண்டிகரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் நீரஜ்குமார் குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோன்று, டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நடிகர் ரன்விஜய் சிங் கலந்து கொண்டார். டெல்லி காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தானில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரன்விஜய் சிங், போதைப்பொருள் இல்லாத நாடாக நம் நாடு இருக்க வேண்டும் என கூறினார். மேலும், போதைப்பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை இளைஞர்களிடையே எடுத்துரைப்பது நமது கடமை என குறிப்பிட்டார்.