சாமானியர்களின் எதிர்பார்ப்பை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திரத்துக்குப் பின் இரண்டாவது தடவையாக ஒரே அரசு தொடர்ந்து மூன்று முறை ஆட்சியமைக்க பொதுமக்கள் வாய்ப்பு அளித்திருப்பதாக கூறினார்.
அரசை வழிநடத்த தனிப்பெரும்பான்மையைப் போல பிற கட்சிகளின் ஒத்துழைப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜூன் 25-ஆம் தேதியுடன் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெறுவதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, எதிர் காலத்தில் அவசர நிலையை அமல்படுத்த ஒருவருக்கும் துணிச்சல் வராது என்று கூறினார்.
அரசியலமைப்புச் சட்டப்படி, சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உறுதியேற்போம் என்றும், அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.