கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் அதிகமானோர் பலியாகிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜெ.பி. நட்டா எழுதியுள்ள கடிதத்தில், கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய மிகப்பெரிய பேரிடரில், தங்களது தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அமைதி காப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
இந்த வேளையில், திமுக- இண்டியா கூட்டணி தலைமையிலான தமிழக அரசானது, சிபிஐ விசாரணைக்கு உடன்படுவதை தாங்கள் வலியுறுத்த வேண்டுமென பாஜக மட்டுமன்றி, ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்ப்பதாக அந்தக் கடிதத்தில் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்துக்குப் பொறுப்பேற்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கேவிடம் கடிதம் வாயிலாக ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.