இராமாயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் எது என்றால் சந்தேகமே இல்லாமல் ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். பல திருக்கோயில்கள் ஆஞ்சநேயருக்கு இருந்தாலும், நாமக்கல் அனுமன் கோயில் உலகப் புகழ் பெற்றது. அந்த கோயிலைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1500 ஆண்டுகள் பழமையான இந்தக்கோயில். இராமாயணத்தோடு தொடர்புடையது.
ஸ்ரீ இராமபிரான் கேட்ட மூலிகை எது எனத் தெரியாததால்,சஞ்சீவி மலையையே கொண்டுவந்து ஆஞ்சநேயர் கொடுத்தார். தேவையான மூலிகையை ஸ்ரீராமபிரான் எடுத்துக்கொண்ட பின், மீண்டும் சஞ்சீவி மலையை எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்பினார் என்பது ஐதீகம்.
திரும்பும் போது , அந்த மலையிலிருந்து ஒரு பெரிய சாளக் கிராமத்தை எடுத்துவந்தார். வரும் வழியில் சூரிய உதயமானதால், அதை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார் ஆஞ்சநேயர்.
வழிபாடு முடிந்ததும், சாளக் கிரமத்தைத் தூக்க முயன்றும் ஆஞ்சநேயரால் தூக்க முடியவில்லை. ஸ்ரீராமபிரானுக்கு செய்யவேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வந்து எடுத்து போ என்றும் ஒரு வான்குரல் கேட்டது . அதன்படியே ஆஞ்சேநேயர் கிளம்பிச்சென்றார்.
ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தபோது, சாளக் கிரமக்கல் ஒரு நரசிம்மராக வளர்ந்து இருந்தது. ஸ்ரீ ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.
எனவே, திறந்த வெளியில் எதிரே இருக்கும் நரசிம்மரை கூப்பிய கைகளுடன் வணங்கிய படி நின்ற திருக்கோலத்தில், இந்த கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒளிமிகுந்த முகத்துடன் காட்சியளிக்கிறார்.
மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஆஞ்சநேயர் திருமேனி , அவர் பாதத்தில் இருந்து 18 அடி உயரம் கொண்டது. எதிரே உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலின் ஆஞ்சநேய சன்னதியாக இந்த கோயில் உள்ளது.
நாமகிரியில் தாயார் இச்சா சக்தியாகவும்,லட்சுமி நரசிம்மர் கிரியா சக்தியாகவும்,நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஞான சக்தியாகவும் விளங்குவதாக சான்றோர்கள் கூறுகிறார்கள்.
இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகதேசி, நவராத்திரி, ஸ்ரீ இராம நவமி மற்றும் பிரம்மோஸ்த்வம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது
நவகிரகங்களில் சனி மற்றும் ராகு பகவான் தீமையான இடத்தில் இருப்பதால் ஏற்படும் தோஷம், இந்த ஆஞ்சநேயரை வடை மாலை சார்த்தி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.
தேர்வுகளில் முதலிடம் பெறவேண்டி , 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி , இந்தக் கோயிலில் கட்டிவிடுவது மக்களின் நீணட கால வழக்கமாக இருந்து வருகிறது.