வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, டாக்காவில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரி ஆகியவை, நீடித்த மற்றும் ராணுவ நடவடிக்கை குறித்த ஆய்வுகளில் கூட்டாக செயல்படவுள்ளன
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி), டாக்காவின் மிர்பூரில் உள்ள ராணுவப் பணியாளர் கல்லூரி (டி.எஸ்.சி.எஸ்.சி) ஆகியவை, நீடித்த மற்றும் ராணுவ செயல்பாட்டு ஆய்வுகள் குறித்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இரண்டு கல்லூரிகளும் முப்படைகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து, உயர் பொறுப்புகள் மற்றும் கட்டளை பொறுப்புகளுக்கு அவர்களைத் தயார்படுத்துகின்றன.
அவர்கள் பொதுவான நெறிமுறைகள், பயிற்சி பாடத்திட்டம் மற்றும் வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதன்படி, இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருதரப்பும் முடிவு செய்தன.
கடந்த 22-ம் தேதி பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தந்தபோது, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்முறை அறிவை மேம்படுத்தவும், ராணுவ நடவடிக்கை விவகாரங்களில் ஆழமான நுண்ணறிவை வழங்கவும், சிறந்த நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், மாணவ அதிகாரிகள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்தவும் உதவும்.
பயிற்சித் தொகுப்புகள், கூட்டுக் கருத்தரங்குகள், ஆசிரியர்கள் பரிமாற்றங்கள், பரஸ்பர பயிற்றுநர்கள் வருகை ஆகியவற்றை மேற்கொள்ள இது வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.