எமர்ஜென்சி காலத்தில் தவறு செய்த காங்கிரசை மக்கள் இயக்கம் எவ்வாறு தண்டித்ததோ, அதேபோன்று தமிழகத்தில் திமுக தவறு செய்யும்போது மக்கள் தண்டனை வழங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,
எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்தி தவறு செய்தபோது அவரை வெளியேற்றியது அரசியல் கட்சிகள் அல்ல. மக்கள் இயக்கம், அதைப்போல் தமிழகத்தில் திமுக தவறு செய்யும் பொழுது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
எல்லாப் பொறுப்பையும் அரசியல் கட்சி கையில் கொடுப்பது தவறுதான், அரசியல் கட்சி என்பது ஒரு சமூக ஆயுதம். அரசியல் கட்சி மக்களின் குரலாக எதிரொலிக்கும்.. குறிப்பாக சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பார்த்திருக்கிறோம். எனவே மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, மோசமான நிலைமையில் ஆட்சி, சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது. இதனை எல்லாம் மக்கள் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், அரசியல் கட்சியால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் மூலம் உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் திமுகவினர் பதவி ஏற்கும் பொழுது அனைவரும் உதயநிதி வாழ்க என கோஷம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கொத்தடிமைகள்… கொத்தடிமைகள்.. என்று தெரிவித்தார்.