18வது மக்களவையின் சபாநாயகராக, ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகராகும் பெருமையைப் பெற்றிருக்கிறார். அவருக்கான பணிகள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…..
சபாநாயகர் ஆவதற்கு குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்பதால், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த உறுப்பினரையும் சபாநாயகராக பரிசீலிக்கும் உரிமை மக்களவைக்கு உண்டு. இருந்த போதிலும் சபாநாயகர் பதவியானது, மக்களவையின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக இருக்கிறது.
மக்களவையின் முதன்மை இடத்தில் தலைவராக அமர்ந்திருந்து, சபையை நடத்துவது தொடங்கி, தேவைப்பட்ட நேரங்களில் வாக்கெடுப்பு நடத்துவது வரை, சபாநாயகரின் பங்கு மிக முக்கியமானது. (next)
சபைக்குப் பொறுப்பேற்பதோடு, கூட்டத் தொடர்களைத் திறம்பட நடத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது சபாநாயகரின் பணியாகும். மேலும், முக்கியமான அரசியலமைப்பு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கி, சிக்கலான நேரங்களில், சபை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதும் சபாநாயகரின் பணிகளில் முக்கியமானதாகும்.
மக்களவையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை சபாநாயகரே தீர்மானிக்கும் நிலையில் அரசாங்க அலுவல்கள் குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்வார்.
தீர்மானங்கள், மசோதாக்கள் , சட்டத் திருத்தங்கள் போன்றவற்றின் அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்வது குறித்து சபாநாயகர் முடிவெடுக்கிறார். மேலும் சபாநாயகரின் அனுமதி இன்றி அவையின் முன் எந்த ஒரு அலுவல்களையும் கொண்டு வர முடியாது.
நாடாளுமன்றத்தில், சபாநாயகரின் முன் அனுமதியைப் பெற்றே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும் அல்லது கேள்வி கேட்கவும் முடியும்.
இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் சபையின் செயல்பாட்டிற்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதிலும், நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பரந்த அதிகாரங்கள் சபாநாயகருக்கு உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விதிகளை ஒழுங்காக பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் , அவையின் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வழிவகை செய்வதும் சபாநாயகரின் பொறுப்பாக இருக்கிறது.
கடுமையான குழப்பங்கள் ஏற்படும் சூழலில், சபையின் அலுவல்களை ஒத்திவைக்கவும் , இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் சபாநாயகருக்கு இருக்கிறது.
ஒரு உறுப்பினர் எழுப்பிய கேள்வியின் ஏற்புத் தன்மையை, ஆராய்ந்து அவற்றை ஏற்கவும், நிராகரிக்கவும் சபாநாயகருக்கு உரிமை உள்ளது.
மேலும், நாடாளுமன்ற மாண்பைச் சீரழிக்கிறது அல்லது நாடாளுமன்றத்துக்கு எதிராக இருக்கிறது என்று தாம் கருதும் கருத்துக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு உள்ளது.
ஒருவேளை, ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனக் கருத்துக்களை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிட முடியாது என்றும் விதிகள் சொல்லுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட, எந்த ஒரு வாக்கெடுப்பிலும் சபாநாயகர் வாக்களிக்க முடியாது. வாக்கெடுப்பின் போது, வாக்குகள் சமமாக இருக்கும் அபூர்வமான சந்தர்ப்பங்களில் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்க முடியும் .
சபையின் அனைத்து குழுக்களும் சபாநாயகரின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலின் படியே செயல்படுகிறது. மேலும் அந்தந்த குழுக்களுக்குத் தலைவர்களை நியமித்து , குழுக்களில் பின்பற்றவேண்டிய நடைமுறை தொடர்பான அவசியமான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்குகிறார்.
அவையின் வணிக ஆலோசனைக் குழு, பொது நோக்கக் குழு மற்றும் விதிகள் குழு ஆகியவை நேரடியாக சபாநாயகர் தலைமையின் கீழ் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் நிதி தொடர்பான மசோதாக்களுக்குச் சான்றளித்து, நிதி சார்ந்த விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கே தரப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்சி விலகல் தடுப்புச் சட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு கட்சியிலிருந்து ‘இன்னொரு கட்சிக்கு அணி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அவைத் தலைவருக்கு வழங்கி இருக்கிறது. சபாநாயகருக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரத்தை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்திருக்கிறது.
சபா நாயகரின் இந்த முக்கிய அதிகாரம், நெருக்கடி நேரங்களில் , அரசின் ஸ்திரத் தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது. .
சில முக்கியமான விஷயங்களில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு, முரண்பாடு ஏற்படும் சூழலில், இரு அவைகளின் கூட்டு கூட்டத்துக்கும் சபாநாயகரே தலைமை தாங்குவார் .
மக்களவை சபாநாயகருக்கான ஊதியம், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்தே வழங்கப் படுகிறது. மேலும்,சபாநாயகரின் நடத்தையை ஒரு தீர்மானம் கொண்டு வந்து தான் அவையில் விவாதிக்க முடியும் என்பதில் இருந்தே சபாநாயகரின் அதிகார வலிமை எவ்வளவு அதிகமானது என்பது புரியவரும்.
ஒரு நாட்டை வழிநடத்தும் நாடாளுமன்ற அவைக்கு முதன்மை தலைமை அதிகாரியாக விளங்கும் சபாநாயகரின் பணி இத்தனை சிறப்புக்கள் கொண்டதாகும்.