பொலிவியாவில் புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற முன்னாள் ராணுவத் தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றி ராணுவ டாங்கிகளும், வீரர்களும் திடீரென குவிந்தனர். இவ்வளவு முக்கியமான இடங்களை போர்மேகம் சூழ்ந்தால் அங்கே நிலைமை எப்படி இருக்கும்?
வந்திருப்பது யார்? எங்கிருந்து எப்படி வந்தார்கள்? எதிரி நாட்டு வீரர்கள் என்றால் ராணுவத்தையும் உளவுத்துறையையும் மீறி எல்லையைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்தது எப்படி? ஒருவேளை, வந்திருப்பது உள்நாட்டு கிளர்ச்சியாளர்களா? இப்படி பல கேள்விகள் எழும் அல்லவா???
சரி… இவற்றுக்கான பதில் என்ன தெரியுமா? பொலிவிய நாடாளுமன்றத்தையும் அதிபர் மாளிகையையும் சுற்றி வளைத்தது அந்நாட்டு ராணுவத்தின் ஒரு பிரிவு என்பதுதான். அதுமட்டுமல்ல, அதிபர் மாளிகையின் கதவை ராணுவ டாங்கியைக் கொண்டு உடைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இவ்வளவுக்கும் காரணம் பொலிவிய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜுனிகா (Gen Juan José Zúñiga).
“ஜனநாயகத்தை ஆயுதப்படைகள் சீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. அதிபர் லூயிஸ் ஆர்ஸை (Luis Arce) மதிக்கிறேன். அதே வேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும்”
ராணுவப் புரட்சி மூலம் பொலிவிய அரசை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கும் தமது
செயலுக்கு ஜுனிகா கொடுத்த தன்னிலை விளக்கமே இது.
அவரது நடவடிக்கைகளால் பொலிவிய தலைநகர் லா பாஸில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அதன்பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். சிறிது நேரத்தில் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜுனிகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஜுனிகா, செல்வாக்கு மிக்க முன்னாள் அதிபரும், பொலிவிய இடதுசாரிகளில் மூத்த அரசியல்வாதியுமான ஈவோ மொரேல்ஸை கடுமையாக விமர்சித்தார்.
மீண்டும் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் கைது செய்யப்படுவார் என்றும் மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து ஜுனிகாவிடம் இருந்து ராணுவத் தளபதி பதவியைப் பறித்த தற்போதைய அதிபர் லூயிஸ் ஆர்ஸ், அப்பொறுப்புக்கு வேறு ஒருவரையும் நியமித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜுவான் ஜோஸ் ஜுனிகா, அரசுக்கும் அதிபருக்கும் எதிராக புரட்சி செய்ய முயன்று தோல்வி அடைந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பொலிவிய கடற்படைத் தலைவர் வைஸ்-அட்மிரல் ஜுவான் ஆர்னெஸ் சால்வடார் (Juan Arnez Salvador) உள்பட மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பேசிய பொலிவிய அதிபர் லூயிஸ் ஆர்ஸ், ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றார்.
அதே போல் ஜுனிகாவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிபர் ஈவோ மொரேல்சும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே பொலிவிய அரசுக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் பொலிவியாவில் நிகழ்ந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.