வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிக்கம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் இன்ஜினியர்கள் வெறும் 72 மணிநேரத்தில் 70 அடி பெய்லி பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை இந்திய இராணுவம் எவ்வாறு செய்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி, வரலாறு காணாத தொடர் கனமழை பெய்தது. இடைவிடாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கிம் மாநிலமே சிக்கித் தவித்தது.
சிக்கிம் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள மங்கன் மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பலர் பலியாகியுள்ள நிலையில், சுமார் 1,500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மொபைல் நெட்வொர்க் இல்லாமல் சிக்கி தவித்தனர்.
நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மின்கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மாநிலத்தின் வடக்கு பகுதிக்குச் செல்லும் முக்கிய சாலைகளான (Dikchu-Sanklang-Toong) டிக்சு-சங்க்லாங்-டூங், (Mangan-Sanklang) மங்கன்-சங்க்லாங், (Singtham-Rangrang) சிங்தாம்-ரங்ராங் மற்றும் (Rangrang-Toong) ரங்ராங்-டூங் ஆகிய சாலைகள் நிலச்சரிவுகளால் உடைந்தன.
மங்கன், சோங்கு மற்றும் சுங்தாங் ஆகிய பகுதிகளை இணைக்கும், ((Teesta River)) டீஸ்டா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட bailey bridge பெய்லி பாலம் இடிந்து சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான், இந்தியா இராணுவம், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. இதையடுத்து, காங்டாக்கின் திக்சு சங்க்லாங் சாலையில் 70 அடி பெய்லி பாலத்தைச் சரியாக 72 மணி நேரத்தில் கட்டி சாதனை படைத்துள்ளனர். பாலம் கட்டியதோடு மட்டுமின்றி, தொடர் கனமழையால் பாதிப்படைந்த எல்லைக் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பல மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல, இந்த பாலம் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திக்சுவிலிருந்து சங்க்லாங் வழியாக, சுங்தாங் பகுதிக்கான இந்த இணைப்பு பாலம், உடனே கட்டி முடிக்கப்பட்டதால், மாங்கன் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்க முடிகிறது என்று அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநில வனத்துறை அமைச்சரும், பேரிடர் மேலாண்மையின் மாநிலச் செயலாளருமான பிண்ட்சோ பாலத்தை விரைவாக கட்டி முடித்த, இந்திய ராணுவத்தைப் பாராட்டியுள்ளார்.
இப்படி சாதனை செய்வது, இந்திய இராணுவத்துக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கடந்த வாரம், வடக்கு சிக்கிமில் 150 அடி பாலத்தை 48 மணி நேரத்தில் கட்டி, தொடர் கனமழையால் தனிமைப்படுத்தப்பட்ட எல்லைக் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருக்கிறார்கள்.
இந்திய இராணுவத்தின் தன்னலமற்ற சேவையை பாராட்டாமல் எந்த ஒரு இந்தியரும் இருக்க முடியாது.