நீதிமன்றத்தை கோயிலுக்கு இணையாகவும், நீதிபதிகளை கடவுளுக்கு நிகராகவும் கருதுவது மிகுந்த ஆபத்தானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதி அகாடெமியின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், குற்ற வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் நிலையை எண்ணி இரக்க உணர்வுடன்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
சாமானிய மக்கள் நீதித்துறையை அணுகவும், தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளவும் மொழி தடைக்கல்லாக இருப்பதாகவும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்க்க தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 51 ஆயிரத்துக்கும் அதிகமான தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.