‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்று கேரளாவில் பரவி வருகிறது. அது என்ன மூளையை உண்ணும் அமீபா? விரிவாகப் பார்க்கலாம்.
கடவுளின் தேசமான கேரளாவில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம். அதனால் நீந்துவதிலும் மீன்பிடிப்பதிலும் கேரள மக்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. எனினும் இன்றைய சூழலில் கேரள நீர்நிலைகளில் நீந்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வியை அமீபிக் தொற்று குறித்த செய்திகள் எழுப்பியுள்ளன.
அண்மையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் ஒருவகை அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் 5 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்த அனைவருக்கும் அமீபாவைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் ‘மூளையை உண்ணும் அமீபா’-வைப் பற்றி தெரிந்திருக்காது. Naegleria fowleri எனப்படும் அமீபா ‘மூளையை உண்ணும் அமீபா’ என்றழைக்கப்படுகிறது. அசுத்தமான நீரில் இருக்கும் இவ்வகை அமீபா அதில் நீந்துவோரின் மூக்கு வழியே ஊடுருவி மூளையை தாக்குகிறது. அதன்காரணமாகவே ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று இதற்கு பெயர்.
இந்த வகை அமீபா ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தது அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். கடுமையான காய்ச்சல், தலை வலி, கழுத்து வலி, வாந்தி, உணர்திறனில் பாதிப்பு போன்றவையே இதன் அறிகுறிகள். இந்த அமீபிக் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 95 முதல் 100 விழுக்காடு. இதற்கென்று தனி சிகிச்சையோ மருந்துகளோ கிடையாது. அசுத்தமான நீரில் நீந்தாமல் இருப்பதும், நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பதுமே இந்த பிரச்னைக்கான தீர்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மிக அரிதாக அருவி மற்றும் கடல் நீர் மூலமும் ‘மூளையை உண்ணும் அமீபா’ பரவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.