ஆங்கிலேயர் காலத்திய குற்றவியல் சட்டங்கள் தண்டனைக்குதான் முக்கியத்துவம் அளித்ததே தவிர, நீதி பரிபாலனத்துக்கு அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த நிலையில், அமைச்சர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கழித்து, குற்றவியல் நீதி அமைப்பு சுயசார்பு அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டக்கூறுகளை உள்ளடக்கி புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன்மூலம் தண்டனை வழங்குவதற்கு பதிலாக நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.
இந்தச் சட்டங்களின் மூலம் காலதாமதமின்றி விரைவாகவும், துரிதமாகவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் போலீஸாரின் உரிமைகள்தான் பாதுகாக்கப்பட்டதாகவும், புதிய சட்டங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோர் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.