69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளதால், இனியும் தாமதிக்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் எந்நேரமும் விசாரணைக்கு வரலாம் என்ற நிலையில், தமிழக அரசு ஆபத்தை உணராமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல என்று கூறியுள்ள அன்புமணி, தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே, அரும்பாடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.