இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், அதை ரத்து செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தேர்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர பிரத்யேக குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் நம்பகத்தன்மையில் முறைகேடு நடைபெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும்
இளநிலை நீட் தேர்வு முடிவு ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், அதை ரத்து செய்வது அறிவுக்கு உகந்ததாக இருக்காது என்றும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேர்வை ரத்து செய்தால், அது நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீவிரமாக பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
வெளிப்படையான, சுமுகமான தேர்வு முறையை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதை அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு மேற்கோள் காட்டியுள்ளது.