ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னால் வாங்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஹதூர்பூரைச் சேர்ந்தவர் சாமியார் போலே பாபா. முன்னாள் காவலரான இவர், அந்தப் பணியை விட்டுவிட்டு ஆன்மிகத்துக்கு வந்தவர். அவருக்கென்று லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் போலே பாபா நிகழ்த்திய சொற்பொழிவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து போலே பாபா கிளம்பிய போது அவரது காலடி மண்ணை சேகரிப்பதற்காக பலர் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 112 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போலே பாபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையிலோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலோ அவரது பெயர் இடம்பெறவில்லை. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை அழைத்தது, போதிய ஏற்பாடுகளை செய்யாதது, கூட்டம் நடக்கும் இடத்தை சரியாக ஆய்வு செய்யாதது என அனைத்துக்கும் ஏற்பாட்டாளர்களே காரணம் என்று கூறுகிறது சிறப்பு புலனாய்வுக் குழுவின் 300 பக்க அறிக்கை.
இதற்கு பின்னால் பட்டியலின அரசியல் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்த போலே பாபாவுக்கு அம்மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதன்காரணமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் போலே பாபாவின் பெயரை இழுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மட்டுமே பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி மற்றும் மதம் ஆகியவை வாக்கு வங்கி அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. அம்மாநில கிராமங்களில் 30 விழுக்காடு அளவுக்கு பட்டியலின மக்கள் வசிப்பதாக தெரிகிறது.
அதில் 60 விழுக்காட்டினர் போலே பாபாவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் 2026 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.