பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
நிகழாண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த நிலையில், வரும் 23-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த வகையில் மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டி, டெல்லியில் பொருளாதார நிபுணர்களை சந்தித்து பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளைக் கேட்டறிந்தனர்.
ஏற்கெனவே தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த முறை ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.