கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் முதல் சரக்கு கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இது, இந்திய துறைமுக வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு துறைமுகங்கள் இருந்தாலும் அவற்றில் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தும் வசதி இல்லை. அதனால் சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பெரிய கப்பல்களுக்கு மாற்றப்படும்.
இதற்காக 2016 – 2017-ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கும் இந்தியாவின் கடல்வழி வாணிபத்தை மேம்படுத்தவும் வரப்பிரசாதமாக வந்திருப்பதே விழிஞ்ஞம் துறைமுகம். இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் துறைமுகம் என்றழைக்கப்படுகிறது. 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மதிப்பில் அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ளது விழிஞ்ஞம் துறைமுகம்.
மற்ற துறைமுகங்களைப் போல் அல்லாமல், சர்வதேச கிழக்கு – மேற்கு கப்பல் பாதையிலிருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்திருப்பது மிகவும் சாதகமான ஒன்று. இந்தத் துறைமுகம் சர்வதேச பாதைக்கு அருகில் இருப்பதால் இது இந்தியாவின் கிரீடமாக இருக்கப்போகிறது என்றும் கணிக்கிறார்கள்.
இந்த துறைமுகத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் கன்டெய்னர்களை கையாள முடியும். 19 புள்ளி 7 மீட்டர் ஆழத்தை இயற்கையாகவே கொண்டிருப்பது விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு மற்றுமொரு PLUS POINT.
இதை பயன்படுத்தி கொழும்பு செல்லும் சரக்கு கப்பல்களை ஈர்க்க முடியும். மேலும் சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களிலிருந்து இப்போது கொழும்பு வழியாக செல்லும் சரக்குகள் விழிஞ்ஞம் வழியாக செல்ல முடியும். அதனால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும். மற்றொருபுறம் வேலைவாய்ப்புகளும் உள்கட்டமைப்புகளும் பெருகும்.
தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா எனப் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைவதற்கு விழிஞ்ஞம் துறைமுகம் காரணமாக இருக்கும்.
2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் பெருமளவில் நிறைவடைந்த நிலையில், சீனாவில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் முதல் சரக்கு கப்பல் விழிஞ்ஞத்தை வந்தடைந்தது. San Fernando என்ற அந்த தாய்க் கப்பலுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த இரண்டாம் தேதி சீனாவிலுள்ள சியாமென் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட San Fernando சரக்கு கப்பல் 9 நாள் பயணித்து விழிஞ்ஞத்தை அடைந்தது.
இது இந்திய துறைமுக வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் விரைவில் முழுவீச்சில் விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.