காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஏற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தினமும் ஒரு டி.எம்சி. தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குற்றம் சாட்டியுள்ள அவர், கர்நாடக அணைகளுக்கு தினமும் 3 புள்ளி 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதில் 1 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அல்ல என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தண்ணீரை அணைகளில் இனியும் தேக்க முடியாத காரணத்தினாலேயே 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டுக்குறிய உரிமைகளை அரசு தாரைவார்த்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
கர்நாடக அரசு அதையும் மதிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.