ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பத்திரியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்,
புதிய கல்விக் கொள்கை முறையை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வில் 59% சதவீதமானவர்கள் தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ளனர். நீட் தேர்வு குளறுபடிகள் முறையாக சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு முன்னால் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் தற்போது, பத்தாண்டுகளுக்கு பிறகு எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என தெரிவித்தார்.
நீட் தேர்வு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் யார் உள்ளார்கள் என அறிய முறையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
4372 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் இல்லை எனவும் 19,000 ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. ஆசிரியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றவில்லை.
பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் கூட இல்லாத நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களின் உடல் வலிமையை கருத்தில் கொண்டு உடற்கல்வி ஆசிரியர்களை கூட நியமிக்காத அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது எனவும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கையை கூட நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது என குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை குறைத்து வழங்கியுள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.