இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுதொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து வரும் 18-ஆம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது மற்றும் தேர்வில் நேரமிழந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆகையால், நீட் மறுதேர்வு நடத்த கோரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 30-க்கும் அதிகமான மனுக்கள் தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விசாரிக்குமாறு தேசிய தேர்வு முகமைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இதற்கு ஒப்புதல் தெரிவித்ததுடன், இந்த மனுக்கள் மீது வரும் 18-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.