பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகன மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசித்த கருணாநிதி, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்துள்ளார்.
பின்னர் சாலையை கடக்க முயன்றபோது, பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.