உத்தரகண்ட் மாநிலத்தில், பாகேஷ்வரில் உள்ள சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலை பாபா யோகி சைதன்யா ஆகாஷ் என்பவர் அரசு விதிமுறைகளை மீறி கட்டி உள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், சரயு மற்றும் கோமதி நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.
இமயமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாகேஷ்வர் தன் இயற்கை அழகு மிக்கது. பழமையான இந்து மத வரலாற்று சிறப்பு உடைய சிவன் கோயில்களான பாக்நாத் மற்றும் பைஜ்நாத் கோயில்கள் பாகேஷ்வரில் உள்ளன.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பாகேஷ்வரில் பிக்ஹௌடி மேளா வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சம் பாரம்பரிய குமாவோனி நடனம் ஆகும், இது இப்பகுதியின் பிரபலமான நாட்டுப்புற நடனமாகும்.
இமயமலை அடிவாரத்தில் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள பாகேஷ்வர் நகரம் இயற்கை அழகு. கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகான ஆறுகள் என இயற்கை அழகு நிறைந்தது. பாகேஸ்வரில் உள்ள பிண்டாரி பனிப்பாறை மற்றும் சுந்தர்துங்கா பனிப்பாறை ஆகியவை பிரபலமான மலையேற்ற இடங்களாகும்.
இத்தனை இயற்கை அழகு கொஞ்சும், சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில், விதிமுறைகளை மீறி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. தன்னை தானே கடவுளாக சுய பிரகடனம் செய்து கொண்ட பாபா யோகி சைதன்ய ஆகாஷ் என்பவர் இக்கோயிலைக் கட்டி இருக்கிறார்.
தனது கனவில் பகவதியம்மன் தோன்றி, சுந்தர்துங்கா பனிப்பாறையில் உள்ள தேவி குண்டம் என்னும் இடத்தில் கோயிலைக் கட்டும்படி கட்டளையிட்டதாகக் கூறி, கோயில் கட்டும் திட்டத்துக்கு உள்ளூர் கிராம மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
இந்த தேவி குண்டம், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்துக்கள் மிக புனிதமான வணங்கும் இடமாகும். புனிதமான தேவி குண்டம், இப்போது பாபாவின் நீச்சல் குளமாகி இருக்கிறது. தேவி குண்டத்தில் பாபா குளிப்பது, பகவதி அம்மனை மட்டுமில்லை இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மேலும், பல நூற்றாண்டுகளாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நந்தராஜ் யாத்திரையின் போது தங்கள் தெய்வங்கள் தேவி குண்டத்துக்கு வருகிறார்கள் என்றும், இந்த பாபா கிராம மக்களைத் தவறாக வழிநடத்தி, தங்கள் பாரம்பரியத்துக்கு எதிராக இந்த கோவிலைக் கட்டியுள்ளார் என்று உள்ளூர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களின் எதிர்ப்பால், உரிய அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த கோயில் குறித்து அரசு தன் விசாரணையை தொடங்கியுள்ளது.
வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் அலுவலகத்தின் குழு விரைவில் தேவி குண்டத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என்று கூறிய சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அனுராக் ஆர்யா, விரைவில் பாபா யோகி சைதன்யா ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
இந்திய பாரம்பரியம் மிக்க இடங்களில் இது போன்ற தனிநபர்கள், உரிய அனுமதி பெறாமல் தங்கள் இஷ்டத்துக்குக் கோயில் என்ற பெயரில் கனிம வளம் மிக்க நிலங்களை ஆக்கிரமிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.