இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமே பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நர்கோ-ஒருங்கிணைப்பு மையத்தின் 7வது உச்ச நிலைக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தேசிய போதைப்பொருள் உதவி மையமான ‘மனஸ்’ அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமான முறையில் நடைபெற்று வருவதாகவும், அதை ஒரு பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.
35 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அவர்களை வழிநடத்த உறுதி அளிக்காவிட்டால் இந்த போரில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மோடி அரசாங்கத்தின் முயற்சியால், பல போதைப்பொருள் நெட் ஒர்க்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தற்போது பல அடுக்கு குற்றமாக மாறியுள்ளதால், இதை நாம் கடுமையாக கையாள வேண்டும் எனக் கூறிய அமித்ஷா, போதைப்பொருள் எங்கிருந்து வந்தாலும், எங்கு சென்றாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து போராடாவிட்டால், இந்தப் போரில் வெற்றி பெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.