வலியில்லாமல் வேதனை இல்லாமல் மரணிக்க விரும்புவர்களுக்க சாதனம் ஒன்றை சுவிட்சர்லாந்தில் உருவாக்கி இருக்கின்றினர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்ட அனுமதி இல்லை என்றாலும் கருணைக் கொலைக்கு அந்நாட்டில் அனுமதி உண்டு. எந்த வித நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தது போதும் என்று எண்ணும் நபர்களுக்கு , இறப்பதற்கு வழி காட்டும் அமைப்புக்களும் சுவிட்சர்லாந்தில் உள்ளன. அப்படி ஒரு அமைப்புத் தான் THE LAST RESORT என்ற அமைப்பு.
இந்த அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கும் போரியன் வில்லட், விருப்பப்பட்டு சாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் இந்த சிறிய தற்கொலை சாதனத்தை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட Sacro capsule, சாதனம் பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போல் காட்சியளிக்கிறது.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவுக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த சர்கோ காப்ஸ்யூல் என்ற சிறிய சாதனம். 3டி தொழில் நுட்பத்தில் இந்த வாகனம் உருவாக்கப் பட்டுள்ளது.
நெதர்லாந்தில் 12 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின், சுமார் 7.10 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கருணைக்கொலை வழக்கறிஞரான டாக்டர். பிலிப் நிட்ச்கே, இந்த தற்கொலை சாதனத்தை உருவாக்கியுள்ளார். அவர், கண்ணியமான மரண அனுபவத்தைப் பெற விரும்பும் மக்களுக்காக இது தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மிகவும் நவீனமயமாக உருவாக்கப்பட்டிருக்கும், இந்த சர்கோ காப்ஸ்யூலில் ஏறி உள்ளே படுத்துக் கொண்டபின் மூடியை மூடிவிட்டால், குரல் செயலி மூலம் சாவதற்கான வழிமுறைகளை தானியங்கி அறிவிக்கிறது. கடைசியாக இந்த பட்டனை அழுத்தவும் என்று கட்டளை இடுகிறது என்று டாக்டர். பிலிப் நிட்ச்கே தெரிவித்திருக்கிறார்.
ஒருமுறை பட்டனை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 வினாடிகளுக்குள் 21 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகக் குறைகிறது. இதனால் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்குள்ளேயே சர்கோ காப்ஸ்யூலில் படுத்திருக்கும் நபருக்கு மரணம் ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒருமுறை பட்டனை அழுத்தினால், வலியற்ற மரணம் நிச்சயம் என்று கூறும் டாக்டர். பிலிப் நிட்ச்கே வழக்கமான கருணைக்கொலை முறைகளுக்கு மாற்றாக இது மனிதாபிமானத்தை வழங்குகிறது என்று கூறியிருக்கிறார்.
ஒருவர் இந்த சர்கோ காப்ஸ்யூலைப் பயன்படுத்த 20 அமெரிக்க டாலர்கள் என்று விலை நிர்ணயிக்க பட்டுள்ளது.
உலக நாடுகளின் மகிழ்ச்சிக் குறியீட்டு பட்டியலில், 7வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தில், சாக்ரோ கேப்சூல் என்ற பெயரில் தற்கொலை வாகனம் வந்திருப்பது, விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பட்டனைத் தட்டினால் போதும் தூக்கம் வருவது போல மரணம் மெல்ல மெல்ல வரும் என்ற இந்த சர்கோ காப்ஸ்யூல் மூலம் இறப்பை போகும் முதல் நபர் யார் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.