“சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் தூண்டுதலில் பேரில், தன் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் மீதும் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் எனத் தெரிவித்துள்ளார்.
“போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடைபெற்றது” என குறிப்பிட்டுள்ளார்.
“மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்தும் பேசியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த 2021-22 -ல் ஆயிரத்து 558 படுகொலைகள், 2022-23 -ல் ஆயிரத்து 596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், ஆக மொத்தம், கடந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் படுகொலைகளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லைஎன்று சுட்டிக்காட்டுள்ளார்.
“திமுக அரசுக்கு எதிரான பாமகவின் போராட்டம் அறவழியில் தொடரும்” என்றும், “போலீசார் தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.